கோவில்பட்டியில் பைக்கில் இருந்த ரூ. 6 லட்சம் திருட்டு.. சென்னையை சேர்ந்த இருவர் கைது...
பைல் படம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முஹமது புஹாரி (37). இவர், தனது தங்கையின் கணவரான அப்துல் ரஹீம் என்பவருக்கு சொந்தமான கோவில்பட்டி, கடலையூர் ரோடு, சண்முக நகரில் தீப்பெட்டிகளுக்கு தேவையான தீக்குச்சி தயாரிக்கும் கம்பெனியை நிர்வாகம் செய்து வருகிறார்.
தொழில் ரீதியாக வியாபாரிகளுக்கு பணம் கொடுப்பதற்காக கடந்த 13.12.2022 அன்று எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் 6 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தின் சைடு பெட்டியை திறந்து வங்கியில் எடுத்த பணத்தை வைத்து பூட்டி உள்ளார். கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின்ரோட்டில் ஒரு பசை கம்பெனிக்கு சென்றுள்ளார்.
அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடையில் தங்கள் கம்பெனிக்கு வரவேண்டிய பில்லை வாங்கி கொண்டு தனது கம்பெனிக்கு திரும்பி வந்து தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூபாய் 6 லட்சம் பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து செய்யது முஹம்மது புஹாரி கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் காந்தி மற்றும் உதவி ஆய்வாளர் மாதவராஜா ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
பணம் திருப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை, வில்லிவாக்கம் ராஜமங்களத்தைச் சேர்ந்த சக்கரைய்யா (வயது 29), அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 27) மற்றும் ஒருவர் என 3 பேர் சேர்ந்து 6 லட்சம் ரூபாயை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து, தனிப்படை போலீஸார் அவர்களை தேடி வந்த நிலையில், கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் ரோட்டில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சோதனைச் சாவடியில் போலீஸார் வாகன தணிக்கை செய்தபோது அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சக்கரையா மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், கைதான சக்கரைய்யாவிடம் இருந்து ரூ. 2,22,000-ம், பிரசாந்த்திடம் இருந்து 2,30,000-ம் என மொத்தம் 4,52,000 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவிடம் ஒருலட்சம் ரூபாய் இருப்பதாக போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர். மேலும், திருட்டிற்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பின்னர், சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரையும் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu