கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில் விரைவில் சீரமைப்பு பணிகள்: அமைச்சர் தகவல்

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில் விரைவில் சீரமைப்பு பணிகள்: அமைச்சர் தகவல்
X

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு கூடுதல் பேருந்து சேவையை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில் விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் கூடுதல் சேவையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சீனிவாசன், மதிமுக நகர செயலாளர் பால்ராஜ், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் அருண்பாண்டியன், ஐ.என்.டி.யூ.சி.ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

அதனை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவில்பட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கூடுதல் பஸ் நிலையம் - அண்ணா பஸ் நிலையம் இடையே சர்குலர் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பஸ் ரயில்வே நிலையம் வரை செல்லும். இந்த சர்க்குலர் பஸ் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் பஸ் நிலையத்தில் 98 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!