மயான வசதி கேட்டு பாடை கட்டி போராட்டம்.. கோவில்பட்டியில் 50 பேர் கைது...

மயான வசதி கேட்டு பாடை கட்டி போராட்டம்.. கோவில்பட்டியில் 50 பேர் கைது...
X

கோவில்பட்டியில் தடையை மீறி பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர்.

கோவில்பட்டியில் மயான வசதி கேட்டு பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளை கேட்டு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்கள் அளிப்பது வழக்கம். அப்படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருந்தால் போராட்டங்களில் ஈடுபடுவது உண்டு.

ஆர்ப்பாட்டம், சாலை மறியல், தர்னா போராட்டம், முற்றுகைப் போராட்டம், காத்திருப்பு போராட்டம் என பல போராட்டங்கள் பற்றி கேள்விபட்டிருக்கிறோம். சில அமைப்பினர் நூதன முறையில் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபடுவது உண்டு.

அப்படி, ஒரு வித்தியாசமான போராட்டத்தை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ் புலிகள் கட்சியினர் அரங்கேற்றி அனைவரையும் வியப்பி்ல ஆழ்த்தி உள்ளனர். ஆம்! அந்தப் போராட்டம் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக பார்ப்போம்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு ஒன்றியங்களில் வீரப்பட்டி, மெட்டில் பட்டி ராமனூத்து, வில்லிசேரி, தெற்கு சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர் மக்களுக்கு மயான வசதி இல்லை என தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இது தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் மற்றும் சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மயான வசதி கேட்டும், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும் குடியரசு தினத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் வீர பெருமாள், ஒருங்கிணைப்பாளர் பீமாராவ் ஆகியோர் தலைமையில், பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் இருந்து பாடை கட்டி, சங்கு ஊதி ஊர்வலமாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி அவர்கள் சென்றனர். இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில் அதையும் மீறி போராட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீஸார் ஊர்வலத்தை வழி மறித்தனர். இதையடுத்து, தமிழ் புலிகள் கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதனால், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!