மாணவர்கள் நம்முடைய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி பேச்சு

மாணவர்கள் நம்முடைய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி பேச்சு
X

கோவில்பட்டியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசினார்.

மாணவர்கள் நம்முடைய வரலாற்றையும், கடந்த கால போராட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என எம்.பி. கனிமொழி பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், ஜி.வி.என் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில், நாமும், கல்வியும் என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

மாபெரும் தமிழ் கனவு என்கின்ற தலைப்பு வர காரணம் என்னவென்றால். தமிழகத்தில் உள்ள ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து பல்வேறு புத்தகங்களை படித்து ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை எப்படி செதுக்கி இந்த தமிழ்நாட்டின் கனவுகளை திரட்டி மாநிலமே போற்றக்கூடிய ஒருவரும், நாட்டில் இருக்கக்கூடிய அறிஞர்கள், இன்றும் நாடாளுமன்றத்தில் அவருடைய பேச்சுக்களை மேற்கோள் காட்டக் கூடிய அளவிற்கு அப்படி சிறப்பாக தமிழகத்தில் மூளையில் ஒரு சிறிய ஊரிலிருந்து சென்ற ஒரு மனிதன் ஒரு தமிழகத்தின் கனவுகளை கட்டி எழுப்ப முடியும் என்றால் அது பேரறிஞர் அண்ணா தான்.

அந்த பேரறிஞரை பற்றி அவருடைய கனவுகள் பற்றி பேசும்பொழுது தான் தமிழகத்தில் பல இடங்களில் இருக்கக்கூடிய மாணவர்களுடைய கனவுகளையும் ஒன்றிணைப்பதற்காக இந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி என்பது நம்முடைய முதலமைச்சர் உருவாக்கி இருக்கிறார்.

தமிழ்நாடு எப்பொழுதுமே எழுத்து கல்வியை கொண்டாட கூடிய ஒரு மாநிலமாக இருந்து வருகிறது. உலகமே இன்று உங்கள கையில் உள்ளது. அது சமூகவலைதளம், இன்டெர்நெட், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு வகையில் இருக்கலாம், எதுவாக இருந்தாலும் இன்றைக்கு எந்த செய்தியும் உடனடியாக தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மற்ற உலகில் இருக்கும் மற்ற நாடுகள் மற்ற பண்பாடுகள் நாகரிகங்கள் ஆகியவற்றைப் பற்றிய நாம் படிக்கக்கூடிய தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கும். அப்படி தெரிந்து கொள்ளும்பொழுது ஏதாவது ஒரு நாட்டினுடைய மனிதர்கள் ஒரு நிலம், மொழி பேசக்கூடிய ஒரு இடத்தை சேர்ந்த மக்கள் கல்வியில் தமிழ்நாடு தமிழ் மக்கள் கொண்டாடும் கூடிய அளவிற்கு கொண்டாடி இருக்கிறார்கள் என்றால் இல்லை.

ஏனென்றால் எல்லா இடங்களிலும் கல்வி என்பது மேட்டுக்குடியை சேர்ந்தவர்களுக்கும் மட்டும்தான் என்று உள்ளது. கடந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்னர் கல்வி என்பது சில ஜாதியினருக்கும், மேற்குடிகளாக கருதப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

ஆனால் தமிழர்கள் இந்த மண்ணிலே இருக்கக்கூடிய அனைவருக்கும் கல்வி, அறிவு, எழுத்துக்கள் என்பது என்றும் சமமாக போய் சேர வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். அனைவருக்கும் எண்ணும் எழுத்தும் கல் எனக் கூறினார் ஔவையார், அதேபோல் திருவள்ளுவர் எழுத்தும் அறிவும் மனிதன் நன்றாக வாழ்வதற்கு தேவையான இரு கண்கள் எனவும் கூறினார்.

தமிழ்நாட்டிலே கல்வி என்பது எவ்வளவு போராட்டங்கள், எத்தனை பேர் கஷ்டப்பட்டு இந்த கல்வியை அனைவருக்குமானது என்று உருவாக்கி இருக்கிறோம். இது நம்மிடம் இருந்து தப்பிவிட கூடாது, போராட்ட வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டும்.

நமக்காக இந்தப் போர்க்களங்களை சந்தித்தவர்கள் நமக்காக போராட்டங்களை நடத்தியவர்கள், ரத்தம் சிந்தியவர்கள், கண்ணீர் விட்டவர்கள் மற்றும் சிறையில் இருந்தவர்களுடைய வரலாற்றுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தெரிந்தால் தான் இதை நம்மால் பாதுகாக்க முடியும்.

ஏனென்றால் நமக்கு இருப்பது மாபெரும் தமிழ் கனவு. அந்த கனவு எல்லோரும் சமம். எல்லோரும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். ஆண், பெண், ஜாதி, மதம் என்ற வித்தியாசமற்ற‌ ஒரு அழகான உலகத்தை உருவாக்க வேண்டும். எல்லோரும் இங்கே தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற சுயமரியாதையோடு வாழக்கூடிய பெரியார் கனவு கண்ட ஒரு வாழ்க்கை வாழக்கூடிய உரிமை இருக்கிறது. அதுதான் நம்முடைய தமிழ் கனவு உருவாக்க வேண்டும். மாணவர்களாகிய‌ நீங்கள் அதை உருவாக்க நம்முடைய வரலாற்றை, நம்முடைய கடந்த கால போராட்டங்களில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!