கோவில்பட்டி அருகே குடிநீர் கேட்டு கனிமொழி எம்.பி.யின் கார் மறிப்பு
கோவில்பட்டி அருகே கனிமொழி எம்.பி. காரை மறித்த பெண்கள்.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் பலவேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தூத்துக்குடி வந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் உயர் மட்ட பால அமைக்கும் பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து கழுகுமலை பேரூராட்சியில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பூங்கா பணிகளையும் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
மேலும் தெற்கு கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியிலும் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதற்கிடையில் கழுகுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வானரமுட்டி கிராமத்தில் அவரது வாகனத்தினை திடீரென வழி மறித்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என்றும், இதனால் குடிக்க தண்ணீர் இல்லமால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் முறையிட்டனர்.
தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கனிமொழி எம்.பியிடம் முறையிட்டனர். வானரமுட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி எம்.பி தெரிவித்தார். அப்போது, அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu