தூத்துக்குடி தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த கனிமொழி எம்.பி
கயத்தாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடுகளை திறந்து வைத்து கனிமொழி எம்.பி. பேசினார்.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தத்தெடுத்துள்ள தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில்,கடந்த 1996 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. சிதிலமடைந்திருந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பியின் முயற்சியால், NTT Global Data Centers & Cloud Infrastructure India Private Limited, Chennai. (என்டிடி குளோபல் டேட்டா மையங்கள் & கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட்,சென்னை) தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து, புது வீடுகள் கட்டும் கட்டுமான பணிகளை ஏற்பாடு செய்தார்.
கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவுபெற்ற 9 வீடுகளைக் கனிமொழி எம்.பி பயன்பாட்டிற்கு இன்று (24/10/2023) திறந்து வைத்தார். தொடர்ந்து கனிமொழி பேசியதாவது:-
தங்களுடைய CRS நீதியை இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்காக ஒதுக்கி தந்து உதவி செய்த NTT Global Data Centers & Cloud Infrastructure India Private Limited அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல், Daya Constructions அவர்கள் இந்த வீடுகளைக் காட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு. வீடு எப்படி இருக்கிறது என்று கேட்டால் அனைத்தும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். வீட்டுக்கு உள்ள போய் பார்த்தால் எங்களுக்கும் சந்தோசமா இருக்கக் கூடிய அளவுக்கு அழகாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பகுதிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேருந்து நிலையம் திறக்க வந்து நிகழ்ச்சியின் போது, இங்கு உள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்து இருக்கிறது, நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என்று அழைத்தனர். வீடுகளைப் பார்த்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நானும், அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பல முயற்சிகளைச் செய்து பார்த்தோம்.
ஆனால் கட்டிமுடித்த வீட்டிற்கு, சரி செய்து தர எந்த திட்டமும் கிடையாது. ஒரு தனியார் நிறுவனத்திடம் பேசி, அவர்களுடைய CSR தொகை மூலம் வீடுகளைக் கட்டி முடிக்க முடிவு செய்தோம். தனியார் நிறுவனத்திடம் பேசி, பண உதவி பெற்று, Daya Constructions மூலம் வீடுகளைக் கட்டி முடித்துவிட்டோம். பணிகள் நிறைவுபெற்ற 9 வீடுகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்திருக்கிறோம். இன்னும் 11 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் இன்று துவங்கிவிட்டது. விரைவில் அதுவும் கட்டிமுடிக்கப்பட்டு, திறந்துவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கிறது. அதில், மிகவும் முக்கியமான திட்டம், அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள், கல்லூரி போகக்கூடிய காலகட்டத்தில் எவ்வளவு படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோர்களோ, அது வரைக்கும் படித்து முடித்து, வேலைக்குப் போகிற வரைக்கும், உங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவதற்கு, 'புதுமைப் பெண் திட்டம்'. அதை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களைப் படிக்க வையுங்கள், உயர் கல்விக்கு அனுப்புங்கள் அது மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களின் எதிர்காலம் நன்றாக இருப்பதற்கும் தன்னம்பிக்கை உடன் வாழ்வதற்கும் மிகப் பெரிய அளவில் உதவி செய்யும். அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைப்பது கல்வி தான். அதைத் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி , தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பெண்கள் சுயமாகச் சம்பாதிக்க வேண்டும், தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று பெண்களுக்கான திட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம். அரசாங்கம் பல திட்டங்களைக் கொண்டு வருகிறது, அதைப் பயன்படுத்திக் கொள்வது நமது கையில் தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் திட்டத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்புக் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி. அந்தக் கிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும் நோக்கில் தத்தெடுப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu