காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா திருத்தேர் பவனி
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா திருத்தேர் பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த தேவலாயத்தில் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் பங்குதந்தையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தின் விண்ணேற்பு திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கத்தோலிக்க பண்பாட்டின் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமான காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தின் இந்தாண்டு விண்ணேற்பு பெருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து விழாவின் ஒவ்வெரு நாளும் சிறப்பு திருப்பலி, நற்கருணை பவனி நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரடி திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி இன்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒரு தேரில் விண்ணரசி மாதா அன்னையும், மற்றொரு தேரில் பரலோகமாதா அன்னையும் வீற்றிருக்க பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் வெள்ளத்தில், பூக்கள் தூவப்பட்டு திருத்தேர் பவனி ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் நடைபெற்றது.
இந்திய சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் தேரில் இருந்த மாலைகள் தேசிய கொடி நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. தேர் பவனிக்கு பின்னால் நான்கு வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பிடு சேவை நடத்தினர். மேலும் ஆலய வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அந்தோனி குரூஸ், உதவி பங்குதந்தை செல்வின், மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu