கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் தென்பழனி என அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ளது. குடவரை கோயிலான இந்த திருத்தலத்தில் வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும். வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயிலுக்கு வந்துச் செல்வது உண்டு.
மேலும், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களின் அரோஹரா.. அரோஹரா.. என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனையும் பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் திருத்தேரோட்டம் ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, 5 ஆம் தேதி தீர்த்தவாரி, தபசு நிகழ்ச்சியும், 6 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu