கந்து வட்டியை ஒழிக்க திருத்த சட்டம் கொண்டுவர அக்னி சட்டி ஏந்தி நூதன போராட்டம்
கழுத்தில் வங்கி காசோலைகளை மாலையாக அணிந்து கொண்டு, கையில் அக்னிச்சட்டியுடன் நூதன போராட்டம் நடத்திய காங்கிரஸ் பிரமுகர்.
தமிழக அரசு கந்துவட்டியை ஒழிக்க திருத்தச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் பிரமுகர் அக்னிச்சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, தனது கழுத்தில் வங்கி காசோலைகளை மாலையாக அணிந்து கொண்டு, கையில் அக்னிச்சட்டியுடன் கந்துவட்டி கும்பல்களை ஒழிக்க திருத்தச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் வழங்கிய மனுவில், தமிழகத்தில் கந்துவட்டி, வார வட்டி, தின வட்டி, மீட்டர் வட்டி என மிகப்பெரிய மாபியா கும்பல் மண்டலம் வாரியாக செயல்பட்டு வருகிறது. இதில் கந்துவட்டி கும்பல் ஒரு லட்சத்துக்கு வார வட்டியாக ரூ.10,000 ஆயிரம் என வசூல் செய்கின்றனர். அவசரத் தேவைக்கு கடன் பெற்று விட்டு திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் கடன் பெற்றவர்களை மிரட்டுதல், ஆள்கடத்தல், அத்துமீறி கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே தமிழகம் முழுவதும் கந்துவட்டி புகார் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரிக்க வேண்டும். கந்துவட்டி கும்பல்களால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட வெற்று காசோலைகள் புரோ நோட்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
இவற்றால் பாதிக்கப்பட்ட நபர் மீது வழக்கு தொடுக்க முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு தரவேண்டும். கந்து வட்டி என்று வழக்குப் பதிவு செய்த உடன் சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து ஓராண்டுக்குள் கந்துவட்டி சம்பந்தமான வழக்குகளை விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சட்ட வல்லுனர்கள் குழு ஆலோசனைப்படி கந்துவட்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் என திருத்தச் சட்டம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu