கோவில்பட்டியில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உடுக்கு அடித்து போராட்டம்
கோவில்பட்டியில் த.மா.கா. சார்பில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உடுக்கு அடித்து போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியை கூறுவது வாடிக்கையாக உள்ளது.
இதற்கிடையே, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என அறிவித்து இருந்தது. எனவே, தேர்தலுக்கு முன்பு அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை ஒழிக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கனி தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது, உடுக்கை வாசிப்பாளர் தட்சிணாமூர்த்தி உடுக்கை வாசித்தபடி மது ஒழிப்பு சம்பந்தமான பாடலைப் பாடினார். தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் வழங்கினர்.
இந்தப் போராட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால், வட்டாரத் தலைவர் அழகர்சாமி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுவிலக்கை வலியுறுத்தி உடுக்கை அடித்தபடி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu