உறுப்புகள் தானம் செய்த விவசாயி உடலிற்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

உறுப்புகள் தானம் செய்த விவசாயி உடலிற்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
X

விவசாயி கிருஷ்ணசாமியின் உடலுக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.

தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த மீனவர் மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகியோர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதையெடுத்து, அவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் நடைபெற்றது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி (42) என்பவர் 20.11.2023 அன்று இரவு பந்தல்குடி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.

உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், விவசாயி கிருஷ்ணசாமி மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.. இதைத் தொடர்ந்து கிருஷ்ணசாமியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.


இந்த நிலையில், உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட விவசாயி கிருஷ்ணசாமியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. உடல் உறுப்புகளை தானம் செய்த விவசாயி கிருஷ்ணசாமி உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!