தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை காலி செய்துவிடுவார்.. முன்னாள் அமைச்சர் பேட்டி…

தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை காலி செய்துவிடுவார்.. முன்னாள் அமைச்சர் பேட்டி…
X

பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிசி அணி துணைத் தலைவர் கோமதி கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் சிலர், அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (ஓபிசி) அணியின் துணைத் தலைவர் கோமதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறியதாவது:

எந்த தேர்தல் வந்தாலும் சரி அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தலைமையின் கீழ் தான் கூட்டணி அமைந்தது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் என இரண்டு அணிகளும் தேர்தலை சந்தித்து வருகிறது.

2016 ஆம் ஆண்டு அதிமுக தனியாக நின்று வெற்றி பெற்றது. அதை உருவாக்கியவர் முன்னாள் ஜெயலலிதா. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் நலன் கருதி நாட்டிற்கு நல்ல பிரதமர் வேண்டும் என்று நினைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை வந்த பிறகு பாஜகவுக்கு கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி தன்னந்தனியாக நின்று போட்டியிட்டனர். தனியாக போட்டியிட்டதன் விளைவை அவர்கள் பார்த்தார்கள். சொற்ப இடங்களில் மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடிந்தது.

அவர்களின் நிலை அறிந்த பிறகு தான் மீண்டும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தார்கள். அதன் வழி தான் கூட்டணி தொடர்ந்தது. ஈரோடு இடைத்தேர்தலில் கூட தன்னந்தனியாக நின்று அதிக வாக்குகளை பெற்றோம். ஈரோடு இடைத்தேர்தல் முன்பு வரை மூன்று அணி என பேச்சு அடிபட்டு இருந்தது. இடைத் தேர்தலுக்குப் பின்பு ஒரே அணி, அதுவும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் தான் அதிமுக இயங்குகிறது.

கட்சி முழுவதும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என உறுதிப்பட்டதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை வழங்கி இருக்கிறது. இழந்த சின்னத்தை மூன்றாவது முறை பெற்ற ஒரே கட்சி அதிமுக தான்.

காலம் காலமாக ஒருவர் கட்சியில் இருந்து மாற்றுக் கட்சிக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இது அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்பது புதிராக இருக்கிறது. எந்த நிர்வாகியாக இருந்தாலும் ஒரு கட்சியில் கருத்து வேறுபாடோ, முரண்பாடோ இருந்தால் வெளியேறுவார்கள். வெளியேறி மாற்று கட்சி செல்வார்கள். அது அவரின் தனிப்பட்ட விருப்பம்.

இதே போல தான் அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவில் இருக்கிறார். இதை நாங்க பெரிதாக எடுக்கவில்லை. அது அவரின் தனிப்பட்ட கருத்து. முதலில் பாஜகவின் ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார் அதிமுகவில் இனைந்த போது அண்ணாமலை வாழ்த்துகள் சொன்னார். அது பண்பட்ட அரசியல். ஆனால், தற்போது அதற்கு அப்புறம் அவர் பேச்சு எல்லாம் படபடப்பு பயத்தின் உச்சியில் இருக்கிறார். அவர் பேச்சில் இந்த படபடப்பும் பயமும் எதுக்கு என்று தெரியவில்லை.

ஐடி விங்கில் இருக்கிறதால் என்ன ரகசியத்தை வெளியிடுவாரோ? என்ற பயத்தில் அண்ணாமலை இருக்கிறாரோ என்று தெரியவில்லை. அதிமுக எதிர்வினை ஆக்கி பழக்கம் இல்லை. நல்வினை ஆக்கி தான் பழக்கம். எதிர்வினை ஆற்றினால் எதிர்வினை தான் வரும்.

அண்ணாமலை எதிர்வினை ஆற்ற வேண்டிய இடம் திமுக. கமிஷன், கரப்ஷன் இதையெல்லாம் அவர் சுட்டிக்காட்டி மத்திய அரசு மூலமா நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவிடுத்து, வாய் சொல்லின் வீரனடி என்று போல் பத்திரிக்கையின் வாயிலாக வெறும் கண்டனங்கள் தெரிவித்து இருக்கிறாரே தவிர வேற என்ன செய்திருக்கிறார் அண்ணாமலை.

இப்போது கூட முதல்வர் ஸ்டாலின் அவரது பிறந்த நாளில் விழாவில் யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் கூறி கூட்டணி அமைப்பிற்கான பேசி வருகிறார். இதையெல்லாம் பேசுவதற்கு திராணி இல்லாத துப்பில்லாத அண்ணாமலை அதிமுகவை பார்த்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

ஒரு லட்சம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவே அசைத்துப் பார்க்க முடியாது. அடிப்படை அரசியல் கூட தெரியாதவர் அண்ணாமலை. இவர் கட்சியில் இருந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. போகிற போக்க பார்த்தா தமிழ்நாட்டுல பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார். இதுதான் நடக்கும்.

கட்சியில் இருந்து போகிறவர்களை போகட்டும் என சொல்லும் தலைவர் ஒரே தலைவர் அண்ணாமலை தான். இதை தேசிய தலைவர் நட்டாவும், அமித்ஷாவும், மோடியும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். இனி அண்ணாமலைக்கு ஆபத்து என்று நினைக்கிறேன்.

தேசிய கட்சியின் முடிவைப் பொறுத்த அளவுக்கு டெல்லியில் தான் முடிவு எடுக்க வேண்டும். தலைமை அங்கு தான் உள்ளது. பாஜக தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது. எந்த மாநிலத்திலும் பாஜக முடிவு எடுக்க முடியாது.

கூட்டணி மட்டுமல்ல எந்த முடிவு எடுக்க வேண்டியது இருந்தாலும் அண்ணாமலை முடிவெடுக்க வேண்டியது கிடையாது. நாடாளுமன்ற தேர்தல் என்பது தேசிய கட்சிக்கு முக்கியமான தேர்தல். எங்களுக்கு மாநில தேர்தல் தான் முக்கியம். அதேபோல் அவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல்தான் முக்கியம். கூட்டணியை பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தான் முடிவு செய்ய முடியுமே தவிர அண்ணாமலை முடிவு செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு