திமுகவில் வாரிசு அரசியல் காலத்தின் கட்டாயம்.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு..
அதிமுகவில் இணைந்தவர்களுடன் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து விளாத்திகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஏற்பாட்டில், அந்த தொகுதிக்குட்பட்ட புதூர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தேமுதிக, தமாகா, திமுக உள்ளிட்ட கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளாருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜயபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, ஆவின் பால் கூட்டுறவு சொசைட்டி தலைவர் தாமோதரன், நகர் மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுகவில் வாரிசு அரசியல் இருப்பது காலம் காலமாக உள்ள அரசியல் தான். அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உழைக்கின்ற தொண்டர்கள் அதிமுகவில் தலைமை பொறுப்பிற்கு வரமுடியும் என்று நிரூபிக்க பட்ட ஒன்று.
எம்ஜிஆர் கட்சி துவக்கி பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்து சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜனநாயக முறைப்படி ஜெயலலிதாவை தொண்டர்கள் தேர்ந்து எடுத்தனர். இரண்டு அணிகளாக பிளவு பட்டாலும் காலத்தின் கட்டாயத்தில் ஜெயலலிதாவின் தலைமையை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அதிமுக திமுக என்பது அடிப்படையிலேயே வேறு. வாரிசு அரசியல் என்பதே அதிமுகவில் கிடையாது. வாரிசு அரசியலை எதிர்த்து உருவாக்கப்பட்ட கட்சி தான் அதிமுக. திமுகவில் உதயநிதிக்கு அடுத்த வாரிசு தலைமைக்கு வந்தால் கூட அவரை திமுகவில் உள்ள இன்றைய முன்னணி தலைவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
பாஜகவினரோடு பயணித்தவர்கள் தான் திமுகவினர். தற்போது என்னவோ தீண்டத்தகாதவர்கள் போல் பாஜகவினை பேசி வருகின்றனர். திமுக எப்பொழுதும் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. பாஜகவோடு கொள்கையில் நாங்கள் எப்பொழுதும் சமரசம் செய்து கொள்வதில்லை. இரு மொழிக் கொள்கையில் எந்த மாறுபாடும் இல்லை.
பாஜகவுடனான கூட்டணி என்பது வேறு, கொள்கை வேறு. எம்ஜிஆர் தந்த இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது அதையே நாங்கள் விட வேண்டும் என்ற பொறாமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன் பேசுகிறார்
அதிமுக கட்சி சிதறவில்லை. கட்டுகோப்பாக உள்ளது. அதிமுக அமைப்பு தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தான் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து உள்ளனர். கட்சியில் எப்பொழுதும் பிளவு இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக ஓ. பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கி வைத்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு விரைவில் இறுதி முடிவு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நல்ல முடிவு வரும். ஓபிஎஸ் கட்சியை விட்டு வெளியேறிய பின்பு அதிமுகவில் பல்வேறு போராட்டங்கள், பொன்விழா கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். எனவே, கட்சியில் பிளவு இல்லை.
ஓபிஎஸ் நியமிக்கும் பொறுப்புகள் எல்லாம் செல்லாத ஒன்று. திமுக ஆட்சியில் எந்தத் துறையிலும் ஆக்கமான பணிகள் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கப்பட்டால் நாங்கள் போராடுவோம். திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர்களை கண்டு பயப்படுகிறார். பொதுக்குழுவில் அவரே பேசியது எல்லோருக்கும் தெரியும்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அடாவடித்தனம் செய்து வசூலில் ஈடுபட்டு வருகின்றனர் அங்கு எந்தவித வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. வியாபாரத்தில் முதலீடு செய்து திரும்பியது எடுப்பது போல் திமுகவினர் செய்து வருகின்றனர் என கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu