கோவில்பட்டியில் காய்கறிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

கோவில்பட்டியில் காய்கறிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர்.
கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை புதுப்பிக்கும் பணிக்காக இடிக்கப்பட்டது. இதற்கு பதிலாக கனிமொழி எம்.பி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்து ஒதுக்கிய கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் நகராட்சி தற்காலிக தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சில வியாபாரிகள் திட்டங்குளம் ஊராட்சியில் எந்தவித அனுமதி பெறமால் தனியார் தினசரி சந்தை தொடங்கினர். அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அனுமதி பெறமால் தொடங்கப்பட்ட தினசரி சந்தை தடை செய்யப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அனுமதி பெற்ற பிறகு தான் சந்தை செயல்படும் என்று தனியார் தினசரி சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த பிரச்னையின் காரணமாக விவசாயிகள் தங்கள் விவசாயப் பொருள்களை சரியான விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், குறைவான விலைக்கு விற்பனை செய்யும் நிலை இருப்பதால் மொத்த வியாபாரிகள் அதிகமாக உள்ள திட்டங்குளம் ஊராட்சியில் தனியார் தினசரி சந்தைக்கு அனுமதி வழங்கி இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டார விவசாயிகள், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கையில் காய்கறிகளுடன் அழுது, ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணனிடம் அவர்கள் வழங்கினர். இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பெஞ்சமின்பிராங்களின், நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் ரவிக்குமார்,ஐ.என்.டி.யூ.சி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் கருப்பசாமி, வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி மாவட்ட தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu