தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் போராட்டம்
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமிரபரணி ஆற்றுப் பாசனம் மற்றும் மானாவாரி பாசனம் என இரண்டு வகை பாசன பகுதிகளையும் உள்ளடக்கியதாக தூத்துக்குடி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, கோவில்பட்டி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம் பகுதி முழுவதும் மானாவாரி பாசனமாகவே திகழ்ந்து வருகிறது.
பருவமழை அதிகமாக பெய்தால் பயிர்கள் சேதமாகும் நிலையும், மழை சரியாக பெய்யாத நிலை ஏற்பட்டால் வறட்சி நிலவும் நிலையும் மானாவாரி பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கயத்தார், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்களில் 1.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மழை குறைவால் 33 சதவீதத்திற்கும் கீழ் மகசூல் குறைந்து உள்ளதாகவும், விடுபட்ட தாலுகாக்களை இணைத்து விவசாயிகள் விடுபடாமல் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வறட்சி நிவாரணம் கோரும் கோரிக்கை விண்ணப்ப மனு கொடுக்கும் போராட்டத்தையும் விவசாயிகள் நடத்தினார். போராட்டத்தின் போது மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும், தமிழக அரசையும் கண்டித்தும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மானாவாரி பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu