காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
கோவில்பட்டியில் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் ராஜேஷ் தலைமையிலான விவசாயிகள் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீர்நிலைகள் மற்றும் பட்டா நிலங்களில் அனுமதியின்றி காற்றாலை நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக் கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையெடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் ஆய்வாளர்கள் வனசுந்தர், தர்மர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காற்றாலை ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி, விளாத்திகுளம் தாலுகா பகுதிகளில் தொடர்ச்சியாக நீர்நிலைகள் மற்றும் பட்டா நிலங்களில் அனுமதியின்றி காற்றாலை நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து வருவதை கண்டித்து புகார் மனு அளித்து இருந்தோம். அதன்பேரில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
அரசுக்கு வருவாய் இழப்பு செய்து வரும் காற்றாலை நிறுவனம் கடந்த 1 ஆம் தேதி கீழக்கோட்டை கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை நேரில் பார்க்கச் சென்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருமைராஜ் தாக்கப்பட்ட செயலும், விளாத்திகுளம் வட்டம் நெடுங்குளம் கிராமம் மயிலேறி மகன் செந்தில்நாதன் தாக்கப்பட்ட செயலும் மனவேதனையும் ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.
எனவே, வருவாய் ஏய்ப்பு செய்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு தகுந்த நீதி வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu