பொன்னேர் திருவிழா கொண்டாடிய விவசாயிகள்: பூமி மாதாவுக்கு சிறப்பு பூஜை
பொன்னேர் திருவிழாவில் பங்கேற்ற விவசாயிகள் டிராக்டர்களுக்கு பூஜை செய்தனர்.
தமிழகத்தில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு விவசாயிகள் பல்வேறு வகையான பூஜைகளை மேற்கொள்வது வழக்கம். இவை ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். தென் மாவட்டங்களில் விவசாயப் பணிகளை தொடங்குவதற்கு முன்பு பொன்னேர் திருவிழா நடத்துவது வழக்கம்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் பொன்னேர் திருவிழா விவசாய சங்க கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அத்துடன் அனைத்து பூஜை பொருள்களுடன் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, விவசாயி ஒருவரின் நிலத்தில் ஏராளமான டிராக்டர்களை நிறுத்தி பூமி மாதாவுக்கு பூஜைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு சிறு அளவில் பசு சாணம் கொண்டு, பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்து பச்சரிசி, வெல்லம், கம்பு அரிசி, நவ தானியங்கள் படைக்கப்பட்டது. தொடர்ந்து பூமிமாதாவுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அந்தப் பூஜை முடிந்தவுடன் நவ தானியங்கள் நிலத்தில் விதைக்கப்பட்டது.
தொடர்ந்து நிலங்களில் இருந்த களைகள் அகற்றப்பட்டன. பின்னர், அனைத்து விவசாயிகளும் நல்ல மழை வேண்டியும், நல்ல மகசூல், பால் வளம் வேண்டியும் அவரவர் நிலங்களில் டிராக்டர் மூலம் உழவு செய்தனர். பச்சரிசி, வெல்லம், பாக்கு, வெற்றிலை, கம்பு அரிசி நனைய விட்டு தயார் செய்த பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அத்துடன் பானக்கரம், நீர் மோரும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
உழவை முடித்து கொண்டு ஊருக்குள் வந்த விவசாயிகள் மீது முறை பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இந்த பொன்னேர் நிகழ்ச்சியில் 60 டிராக்டர்கள் மூலம் உழுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu