கொரோனா ஊரடங்கு தளர்வு: 2 மாதங்களுக்கு பின்னர் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை இன்று கூடியது
தென்தமிழகத்தில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தை இரண்டு மாதங்களுக்குப்பின்னர் இன்று கூடியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
நல்ல தரமான ஆடுகள் குறைவான விலையில் கிடைக்கும் என்பதால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு சென்னை, மதுரை, கோவை, விருதுநகர், தேனி, சிவகங்கை,ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
அதிலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் போன்ற திருவிழா காலங்களையொட்டி நடைபெறும் ஆட்டுச்சந்தை களைகட்டுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக ஆட்டுச்சந்தை செயல்படவில்லை.
இதனால் ஆடுகளை வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்பனை செய்ய முடியமாலும், வியபாரிகள் ஆடுகளை வாங்க முடியமால் தவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு தற்பொழுது ஊரடங்கில் தளர்வு கொடுத்து சந்தைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதையெடுத்து 2 மாத கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இன்று எட்டயபுரம் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. வழக்கமாக சந்தை தொடங்கியது கூட்டம் அதிகமாக காணப்படுவது மட்டுமின்றி விற்பனையும் மும்மரமாக நடைபெறும்.
ஆனால் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் இன்று சந்தை கூடியதால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.
மேலும் ஆடுகள் வரத்தும் மிக குறைவாக இருந்தது. தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். ஆடுகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு ஆட்டிற்கும் ரூ 3000 முதல் 4000ஆயிரம் வரை விலை அதிகமாக இருந்தது. .வழக்கமாக 6 ஆயிரத்திற்கு விற்பனையாகும் ஆடுகள் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டுச்சந்தை செயல்படாத காரணத்தினாலும், ஆடுகள் வரத்தும் குறைவாக இருந்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடுகள் விலை உயர்வு காரணமாகவும், வியாபாரிகள் வரத்து குறைவாக வந்த காரணத்தினால் ஆடுகள் விற்பனை வழக்கத்தினை காட்டிலும் மந்தமாகவே காணப்பட்டது.
கொரோனாவிற்கு பின்னர் ஆட்டுச்சந்தை திறக்கப்பட்டதால் ஆட்டுச்சந்தைக்கு வருபவர்களுக்கு சானிடைசர் வழங்கப் பட்டது. மேலும் காவல்துறை சார்பில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.
வழக்கமாக வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்து மொத்தமாக ஆடுகளை வாங்கி செல்வார்கள். ஆனால் கொரோனா முழுமுடக்கத்துக்குப்பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி இன்று சந்தை திறப்பது பற்றி தெரியவில்லை என்பதால் வியாபாரிகள் வரத்து குறைவாக இருப்பதாகவும், ஆனால் ஆடுகளின் விலை அதிகரித்துள்ளதாகவும், இன்னும் சில வாரங்கள் சென்ற பின்னர் கூட்டமும் அதிகரிக்கும் ஆடுகளின் விலையும் குறையும் என்றும், ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், அதனை பேரூராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu