கோவில்பட்டி அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறக்க வலியுறுத்திபோராட்டம்
தமிழகத்தில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்களுக்கு தனித்தனியே அலுவலகம் உண்டு. கிராம மக்களோடு மிகவும் நெருக்கத்தோடும், அனைத்து வகையான சான்றிதழ்கள் தொடர்பான தேவைகளுக்கும் இந்த இரண்டு அலுவலகங்களும் பிரதானவை ஆகும்.
இருப்பினும், சில இடங்களில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் சேதமடைந்து உள்ளன. சில இடங்களில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் காட்சியளிக்கின்றன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரில் செயல்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை மிகவும் சிதிலமடைந்த நிலையில் காட்சியளித்தன.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் கடம்பூரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் விரைந்து கட்டித் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் நடைபெற இருந்த போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையெடுத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே, கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என மக்கள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை உடனடியாக கட்ட வேண்டும், புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் அய்யலுசாமி கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu