தமிழகத்தில் திராவிட ஒழிப்பு மாநாடு: தமிழர் குடிகள் கூட்டமைப்பு முடிவு
கோவில்பட்டியில் தமிழர் குடிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில் மள்ளர் பேட்டியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனியார் விடுதியில் தமிழர் குடிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் மள்ளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திராவிடம் என்ற கருத்து ஏழை தமிழ் நிலத்தில் இருந்து ஒழிப்பதற்காக திராவிட ஒழிப்பு மாநாட்டை நடத்த உள்ளோம். சென்னை பூந்தமல்லியில் மாநாட்டை நடத்துவதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது.
கடந்த 5 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மனு தாக்கல் செய்தோம். நீதிபதிகள் மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1 ஆம் தேதி திராவிட ஒழிப்பு மாநாட்டினை மள்ளர் மீட்பு களமும், தமிழர் குடிகள் கூட்டமைப்பும் இணைந்து நடத்த உள்ளோம். திராவிடம் என்ற சொல் தமிழிலேயே கிடையாது. அது சமஸ்கிருதத்தில் தான் உள்ளது.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணற்ற உயிர்களை பலி கொடுத்துள்ளோம். எனவே அது தொடரக்கூடாது என்பதால் திராவிடம் அல்லாத தமிழர் ஆட்சியை கொண்டுவர நாங்கள் முனைப்பு காட்டி வருகிறோம்.
தமிழர்களுடைய இயற்கை உணவு, வேளாண்மை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கு தடை கிடையாது. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் தடை. டாஸ்மாக் கடையை திறந்து மதுவை விற்பனை செய்வது போல் மக்களை மயக்கக்கூடிய ஆட்சி தான் தற்போதைய ஆட்சி. டாஸ்மாக் கடையை திறந்து வைத்து இருப்பதும் ஒருவித இன அழிப்புதான். திட்டமிட்ட இன அழிப்பு என்பதால்தான் நாங்கள் திராவிடத்தை எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu