கோவில்பட்டியில் வட்டாட்சியர் முன்பு ரேஷன் அரிசியை கொட்டி போராட்டம்
கோவில்பட்டி வட்டாட்சியர் முன்பு ரேஷன் அரிசியை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு சரிவர பொருட்கள் வழங்குவதில்லை என்றும், ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை தொழில்நுட்ப கோளாறு என்று கூறி பொருட்கள் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைவான பொருட்களை வழங்கிவிட்டு அதிகமான பொருட்கள் வழங்கியதாக குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு மெசேஜ் வருவதாகவும், பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வாங்க சென்றால், டீ தூள், சோப்பு, மைதா, ரவை என மற்ற பொருட்களையும் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் கோதுமை சரிவர வழங்கப்படவில்லை என்றும், எனவே நியாய விலைக் கடைகளில் கால தாமதம் செய்யாமல், சரியான அளவில் பொருட்கள் வழங்க நடக்க வேண்டும், மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்ட வழங்கல் அலுவலரிடம் அவர்கள் வழங்கச் சென்றபோது அங்கு அறை பூட்டப்பட்டு இருந்ததால் அறை முன்பு அமர்ந்து தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து அங்கிருந்த வட்டாட்சியர் வசந்த மல்லிகா முன்பு அவரது மேஜையில் ரேஷன் அரிசியை கொட்டிய தேமுதிகவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் வசந்த மல்லிகா உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட தேமுதிகவினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu