கோவில்பட்டியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு: தொழில் பயிற்சி கண்காட்சி திறப்பு

கோவில்பட்டியில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு: தொழில் பயிற்சி கண்காட்சி திறப்பு
X

கோவில்பட்டியில் தொழில் பயிற்சிக்கான கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோவில்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொழில் பயிற்சி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வித்ய பிரகாசம் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் ஆரம்ப கால பயிற்சி மையத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தொழில் பயிற்சிக்கான கண்காட்சி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.


தொடர்ந்து, ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:

கோவில்பட்டி வித்யபிரகாசம் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை அவர்களே சுயமாக உருவாக்கி உள்ளார்கள். இந்தப் பள்ளியில் பயின்று பயிற்சி பெற்ற மனவளர்ச்சி குன்றிய மாணவர்களால் தற்போது வாழ்க்கையில் சுயமாக சிந்திக்கவும், செயல்படவும் முடிகிறது.

அதுமட்டுமல்லால் கைவினைப் பொருட்கள், கீ செயின் மற்றும் விளையாட்டு பொருட்களை மாணவர்கள் தயாரிக்கிறார்கள். மேலும், பினாயில் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4 ஆவது புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைத் திருவிழா ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவுடன் சேர்ந்து ஏப்ரல் 28, 29, 30, மற்றும் மே 1 ஆம் தேதிகளில் நெய்தல் கலைத் திருவிழாவும் நடைபெற உள்ளது.

புத்தகத் திருவிழாவையொட்டி கோவில்பட்டி கி.ரா. மணிமண்டபத்தில் கரிசல் இலக்கியங்கள் குறித்தும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்டம் தொடர்பான படைப்புகள் குறித்தும், திருச்செந்தூர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், சுதந்திரப்போராட்டத்தில் ஊடகத்துறையின் பங்களிப்பு தொடர்பாகவும் கருத்தரங்கங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகிறது.

மண் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குபெறும் இந்த நிகழ்ச்சிகள் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் 6 தினங்கள் நடைபெற உள்ளது. மேலும் புத்தக வாசிப்பின் அவசியம் மற்றும் நமது கலாச்சாரங்கள் குறித்து உரையாடல்களும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று மண் சார்ந்த மரபுகளை அறிந்து பயன்பெற வேண்டும். மேலும், தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள் மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 10 அரங்குகள் என மொத்தம் 120 அரங்குகள் அமைக்கப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார்.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!