கோவில்பட்டியில் தனியார் காய்கறி சந்தை செயல்பட நீதிமன்றம் தடை

கோவில்பட்டியில் தனியார் காய்கறி சந்தை செயல்பட நீதிமன்றம் தடை
X

கோவில்பட்டி திட்டங்குளம் தனியார் காய்கறி சந்தை (கோப்பு படம்)

கோவில்பட்டி தனியார் தினசரி காய்கறி சந்தை ஜூன் 26 ஆம் தேதி வரை செயல்பட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் எந்தவித அனுமதியும் இல்லாமல் செயல்பட்ட தனியார் சந்தைக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். உரிய அனுமதி பெற்ற பிறகு சந்தையை நடத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், தனியார் சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மார்க்கெட் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சில உத்தரவுகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளது. முறையாக உரிய அனுமதி பெறும் வரை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் செயல்படும் தினசரி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும்படி கோட்டாட்சியர் மகாலட்சுமி வியாபாரிகளை கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், சில நாட்களில் எந்தவித அனுமதியுமின்றி காய்கறி சந்தை திடீரென செயல்பட தொடங்கியது. அதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், தற்போது வரை உரிய அனுமதி பெறவில்லை எனவே கடைகளைத் திறக்க அனுமதி இல்லை என்று கூறி வியாபாரிகளிடம் நோட்டீசை வழங்கினர். இருப்பினும், எந்தவித அனுமதியுமின்றி தனியார் சந்தை செயல்படத் தொடங்கியது.

இதற்கிடையே, அனுமதியின்றி செயல்படும் தனியார் சந்தை குறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரிதத நீதிபதிகள் திட்டங்குளம் கிராமத்தில் உள்ளாட்சி அமைப்பின் அனுமதியின்றி நடைபெறும் தனியார் தினசரி காய்கறி சந்தை ஜூன் 26 ஆம் தேதி வரை செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி நகராட்சி ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself