சட்டவிரோத மின்கோபுரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டபிடாரம், கயத்தாறு பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், இதுகுறித்து தட்டிக்கேட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருமைராஜ் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இ.எஸ்.ஐ மருந்தகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கவுரவ தலைவர் ராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமிட்டு விவசாய விளை நிலங்களை அபகரிக்கும் உள்நோக்கத்தோடு, உயர்மின் கோபுரம் அமைக்கிறோம் என்கிற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களது விளைநிலங்கள் அபகரிக்கப்படுகிறது.
அரசுக்கு சொந்தமான நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை எதுவுமே சட்டப்படி அனுமதி பெற்ற அமைக்கப்படவில்லை. இதை எதிர்த்து போராடும் விவசாயிகளை அச்சுறுத்துகின்றனர். காவல்துறை மூலம் பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர். இதை எதிர்த்து குரல் கொடுத்து மாவட்ட செயலாளர் அருமைராஜ் மீது காவல்துறை மூலம் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளது. போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
காவல்துறையே உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் நிறுவனங்களிடம் பணம் பெற்று, காவல்நிலையங்களுக்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை செய்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தை அபகரிக்க நினைக்கும் அபகரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்கள் அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்பில் இருந்து நீர்நிலைகள் மீட்டு, தூர்வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.
சட்டவிரோத மின்கோபுரங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு 5 மாதங்களுக்கு மேலாகியும் மாவட்ட நிர்வாகம் மதிக்கவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu