கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கைது
கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற தமாகாவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புறவழிச்சாலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு புதிய கூடுதல் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அப்போது, பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை சுற்றுப்பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது. மேலும், இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அனைத்து பேருந்துகளும் கோவில்பட்டி ஊருக்குள் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு சென்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் அப்போதைய மாவட்ட ஆட்சியர் தலைமையில் எடுக்கப்பட்டன.
இதில், சுற்றுப்பேருந்து மட்டும் இயக்கப்பட்டு, நாளடைவில் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இரவு 8 மணிக்கு மேல் அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்ற உத்தரவு மட்டும் அமலாகிவில்லை. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தி, தமாகா சார்பில் கோட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அனைத்து பேருந்துகளும் இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கோவில்பட்டி ஊருக்குள் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வலியுறுத்தி மாடுகளுடன் நான்குவழிச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமாகா நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் கனி உள்ளிட்ட 6 பேர் எட்டயபுரத்தில் இருந்து மறியல் போராட்டம் நடத்துவதற்காக காரில் கோவில்பட்டி வந்து கொண்டிருந்தனர். அவர்களை குமாரகிரி விலக்கு அருகே போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu