கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரை மாற்றி வழங்கப்பட்டதாக புகார்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரை மாற்றி வழங்கப்பட்டதாக புகார்
X

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை முகப்பு படம்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தைக்கு மாத்திரையை மாற்றி வழங்கியதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் - சிந்து தம்பதியினருக்கு கடந்த 60 நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்துள்ளது. அந்த பெண்குழந்தைக்கு கடந்த 31 ஆம் தேதி கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகேஸ்வரன் - சிந்து தம்பதியினர் தடுப்பு ஊசி போட்டுள்ளனர்.

மேலும், தடுப்பு ஊசி போட்ட பின்னர் காய்ச்சல் வந்தால் அதற்காக மாத்திரை எடுத்துக் கொள்ளும்படி பணியில் இருந்த மருத்துவர், மகேஸ்வரன் - சிந்து தம்பதியினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையும் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பெற்றுச் சென்றுள்ளனர்.

அவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு குழந்தைக்கு காய்ச்சல் வந்ததால், அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். மாத்திரை கொடுத்த சிறிது நேரத்தில் குழந்தையின் கை, கால்கள் நிற்காமல் ஆட தொடங்கி உள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரன் - சிந்து தம்பதியினர் பச்சிளம் குழந்தையை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தைக்கு கொடுத்த மாத்திரையை பார்த்துவிட்டு இது சளிக்கு வழங்க கூடிய மாத்திரை. என்று கூறி உள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்தனர் குழந்தையின் பெற்றோர் அந்தக் குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி போட்டு தனது குழந்தைக்கு மாத்திரையை மாற்றி கொடுத்த காரணத்தினால் கை, கால் நடுக்கம் தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும், நரம்பியல் மருத்துவரும் பரிசோதனை செய்யவில்லை, தனது குழந்தையை காப்பாற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் தந்தை மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


ஆனால், இந்த விவகாரம் குறித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர் அகத்தியன் கூறும்போது, தடுப்பூசி போட்ட போது மருத்துவர் சரியான மாத்திரை தான் பரிந்துரைத்துள்ளார். அவர்கள் மருந்தகத்தில் தவறாக வாங்கி சென்றிருக்கலாம் என்றார். மேலும், நரம்பியல் மருத்துவர் வாரத்திற்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் திங்கள்கிழமை மட்டுமே கோவில்பட்டி மருத்துவமனைக்கு வருவதாகவும் மருத்துவர் அகத்தியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோவில்பட்டி மருத்துவமனையில் நிரந்தரமாக நரம்பியல் மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது