கோவில்பட்டியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கோவில்பட்டியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்றே கூறலாம். குடிநீர் கிடைக்காத இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20 ஆவது வார்டு பகுதியான எட்டயபுரம் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகளுக்காக அங்கு இருந்த குடிநீர் இணைப்பு குழாய் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த குடிநீர் குழாய் இணைப்பு உயரமாக வைத்து இருப்பதால் வீடுகளுக்கு சீராக தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்கமால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர்.
இதனால், மாற்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு குழாய்யை சரி செய்து சீராக குடிநீர் வழங்க வேண்டும், அல்லது 2 ஆவது குடிநீர் திட்டம் மூலமாக புதிய குடிநீர் இணைப்பு குழாய் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று பலமுறை நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், 20 ஆவது வார்டு பா.ஜ.க. நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் அந்தப் பகுதி பொது மக்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் திடீரென எட்டயபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது ஒருவார காலத்திற்குள் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu