கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் சேமிப்பு பழக்கத்தை தொடங்கிய குழந்தைகள்
கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் பயிலும் குழந்தைகள் சேமிப்பு பழக்கத்தை தொடங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி உலக சிக்கன நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது 1924 ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான்நகரில் நடந்த சர்வதேச சேமிப்பு வங்கி மாநாட்டின் போது அக்டோபர் 31 ஆம் தேதியை உலக சிக்கன நாளாக அறிவித்தனர்.
இருப்பினும் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நம் நாட்டின் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் இந்தியாவில் அக்டோபர் 30 ஆம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிக்கனம் குறித்து நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக சிக்கன நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
நகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எல்கேஜி, யூகேஜி மாணவர்கள் சிக்கனத்தை கடைபிடித்து சேமிப்பு பழக்கத்தை உருவாக்கிட உண்டியலில் ஒரு ருபாய் நாணயத்தை போட்டு தொடங்கினர். அனைவருக்கும் மண் உண்டியல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசா பேகம் தலைமை வகித்தார். பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ஐசிடிஸ் மேற்பார்வையாளர் ராணி விஜயா வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் சம்பத்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மண்உண்டியலில் ஒரு ருபாய் வழங்கி சேமிப்பு பழக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர் நர்மதா, அங்கன்வாடி உதவியாளர் பர்ஜானா,உள்பட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் சுப்பாராயன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu