நூதன முறையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
கோவில்பட்டியில் நகையை பறிக்கொடுத்த மாரியம்மாள்.
கோவில்பட்டி வேலாயுதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சிவன் மனைவி மாரியம்மாள் (80). மில்லில் வேலை பார்த்து வந்த சிவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பென்சன் பணத்தை மாரியம்மாள் வாங்கி வந்தார். நேற்று பகலில் மாரியம்மாள், கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். அங்கு பென்சன் பணம் ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரைகள் வாங்க நடந்து சென்றார்.
கருவாட்டு பேட்டை அருகே அவர் வந்தபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் உடையணிந்த நபர், பாட்டி மாஸ்க் அணியவில்லையா?, ஊரில் வழிப்பறி சம்பவம் அதிகம் நடக்கிறது. நீங்கள் போட்டிருக்கும் நகையை கழற்றி வைத்து கொள்ளுங்கள் என்று நைசாக பேசி, அவரது மனதை மாற்றினாராம். இதை நம்பிய மாரியம்மாள், தான் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றியுள்ளார். உடனே அந்த நபர் நகையை வாங்கி ஒரு காகிதத்தில் வைத்து மடித்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி, அவரே ஒரு காகிதத்தில் தங்க சங்கிலியை மடித்து கொடுத்தாராம்.
அந்த காகித பொட்டலத்தை வாங்கிய மாரியம்மாள் அங்கிருந்து கிளம்பி மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரைகள் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் காகிதத்தை பிரித்து பார்த்தபோது அதில் நகை இல்லை, சீனி கல் தான் இருந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு சேது லட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu