3700 கிலோ மீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்.. மத்திய அரசு ஊழியருக்கு கோவில்பட்டியில் பாராட்டு…

3700 கிலோ மீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்.. மத்திய அரசு ஊழியருக்கு கோவில்பட்டியில் பாராட்டு…
X

விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள ரவீந்தர் ரெட்டிக்கு பாராட்டு தெரிவிக்கும் கோவில்பட்டி இளைஞர்கள்.

உடல் வலிமையை பேணிக் காக்க வலியுறுத்தி 3700 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அரசு ஊழியருக்கு கோவில்பட்டியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் ரவீந்தர் ரெட்டி. இவர், மத்திய அரசு நிறுவனமான கெயில் நிறுவனத்தில் கெமிக்கல் அனலிஸ்ட் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் உடல் வலிமை பேண வேண்டும், மன அழுத்தத்தை போக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், விளையாட்டுத் துறையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனது விழிப்புணர்வு பாரத யாத்திரை சைக்கிள் பயணத்தை கடந்த மாதம் 29 ஆம் தேதி ஸ்ரீநகரில் இருந்து தொடங்கி உள்ளார்.


ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, தெலுங்கானா, கர்நாடகா வழியாக தமிழகத்துக்கு வந்த ரவீந்திர் ரெட்டி இன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு வந்தடைந்தார். அவருக்கு கோவில்பட்டி சரவணபவன் உரிமையாளர் சீனிராஜ் தலைமையில் இளைஞர்கள் பலர் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து, கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்று அங்கு தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை ரவீந்தர் ரெட்டி நிறைவு செய்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3700 கிலோமீட்டர் தூர பயணத்தை 22 நாள்களில் நிறைவு செய்ய உள்ளதார ரவீந்தர் ரெட்டி தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு பயணம் குறித்து ரவீந்தர் ரெட்டி கூறியதாவது:

தற்போது விடுமுறையில் உள்ளேன். என்னுடைய ஒவ்வொரு விடுமுறை காலத்தையும் பயனுள்ளதாக்கும் வகையில் பல்வேறு இடங்களுக்கு சைக்கிள் மூலமாக விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டு வருகிறேன். தற்போது அனைவரும் உடல் வலிமையை பேண வேண்டும், மன அழுத்தம் இல்லாமல் வாழ வேண்டும், அதற்காக தினமும் உடற்பயிற்சி மேற் கொள்ள வேண்டும், அனைவரும் விளையாட்டுத் துறையில் பங்கேற்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி 3700 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

கோவில்பட்டி மக்கள் சிறப்பானவர்கள். என்னுடைய விழிப்புணர்வு பயணத்திற்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்துள்ளனர். கோவில்பட்டி பொதுமக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். என்னுடைய வாழ் நாளில் மறக்க முடியாத ஊர் கோவில்பட்டி என ரவீந்தர் ரெட்டி தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business