செல்போன் கோபுரத்தை காணோம்... விளாத்திக்குளத்தில் பரபரப்பு புகார்…
செல்போன் கோபுரம் இருந்த இடம்.
தமிழ் திரைப்படங்களில் இடம்பெறும் சில வசனங்களும், காமெடி காட்சிகளும் காலத்தால் அணியாதவை என்றே கூறலாம். குறிப்பாக, வெற்றி பெற்றால் திரைப்பட பஞ்ச் டயலாக் பேசுவதும், தோல்வியுற்ற நேரத்தில் திரைப்படங்களில் வரும் ஆறுதல் வசனங்களை பேசுவதும் வாழ்வில் கலந்து விட்டது. இதேபோல, நகைச்சுவை காட்சிகளும் பல்வேறு நிகழ்வுகளோடு ஒப்பிடப்படுவது உண்டு.
அப்படி ஒருகாட்சிதான் நடிகர் பிரசன்னா, வடிவேலு ஆகியோர் நடித்த கண்ணும், கண்ணும் திரைப்படத்தில் இடம்பெற்ற கிணத்தை காணோம் என்ற நகைச்சுவை காட்சியும். நடிகர் வடிவேலு மற்றும் மறைந்த நெல்லை சிவா ஆகியோர் நடித்த அந்த நகைச்சுவை காட்சியில், `வெட்டிவெச்சிருந்த கிணத்தை காணோம்' என்று பரப்பரப்பான புகாரை காவல் நிலையத்தில் கொடுப்பதுபோலவும், அதன் பிறகு போலீஸார் அங்கு சென்று பார்ப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
இதேபோன்று, ஒரு புகார் தற்போது தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கிணற்றுக்குப் பதிலாக செல்போன் கோபுரத்தை காணோம் என எந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செல்போன்களை காணவில்லை என புகார்களை வாங்கிப் பழகிய போலீஸாருக்கு, செல்போன் டவரையே காணலியா? என்ற புகார் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த புகார் குறித்த விவரம் வருமாறு:
விளாத்திகுளம் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவருக்கு, காமராஜ் நகர் ரோஸ்லின் மருத்துவமனைக்கு பின்புறம் சொந்தமாக இடம் உள்ளது. அந்த நிலத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக 20 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டு, ரூ. 20 லட்சம் தொகையை அந்த நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் கோபுரம் அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது. செல்போன் கோபுரம் அமைக்க அடிப்பகுதியில் இருந்த கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது.
அதைக் கண்டு திடுக்கிட்ட அவர்கள் தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் நில உரிமையாளரிடம் கேட்டபோது டவரை கழற்றி விற்றுவிட்டதாக கூறினாராம். இதன் மதிப்பு ரூ. 21 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மேலாளரான சென்னை, புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (51) என்பவர் விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் இளவரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த செல்போன் கோபுரம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு வரை இயங்கிய அந்த நிறுவனம், அதன் பிறகு தனது சேவைகளை நிறுத்திக் கொண்டதால் அதுபற்றி நிறுவன ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருவதால் செல்போன் கோபுரம் மாயமானது குறித்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விளாத்திக்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu