கோவில்பட்டி ரயில்வே சுரங்கப் பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய பேருந்து
சுரங்கப்பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய பேருந்தை மீட்கும் பணி நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களகாக தீவிரமாக பெய்து வருகிறது. கடற்கரை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இன்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் மாலையில் லேசான சாரல் மழையுடன் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது. மேலும், அந்த சாலையில் மழை நீர் தேங்கி இருந்ததால் அந்தப் பகுதியாக வந்த பள்ளி மாணவர்கள், பள்ளி வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் சென்றன. இந்த பலத்த மழையின் காரணமாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கியது.
அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று சுரங்க பாலத்தில் தேங்கி இருந்த மழைநீரில் சிக்கிக் கொண்டது. அந்த பேருந்தில் 28 பயணிகள் இருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பேருந்தையும் அதில் இருந்த பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.
இதேபோன்று கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ரயில்வே சுரங்க பாலம், லட்சுமி மில் ரயில்வே சுரங்க பாலம் ஆகியவற்றாலும் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். அதேபோன்று அத்தை கொண்டான் பகுதியில் உள்ள பாலம் மழை நீரில் மூழ்கியது. கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி நாலட்டின் புதூர், இனாம்மணியாச்சி, பாண்டவர்மங்கலம், வானரமுட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu