கோவில்பட்டியில் மாட்டு வண்டி போட்டி: விபத்தில் சிக்கிய பந்தய வீரர்கள்
கோவில்பட்டி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் விபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில், வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பந்தய வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது குருபூஜையை முன்னிட்டு எட்டயபுரத்தில் இருந்து விளாத்திகுளம் செல்லும் சாலையில், மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பெரிய மாடுகளுக்கான முதல் சுற்று சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், தொடர்ந்து 21 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட சிறிய மாடுகளுக்கான முதல் சுற்று நடைபெற்றது. சிறிய மாடுகளுக்கான போட்டி தொடங்கிய சில மணித் துளிகளிலேயே தொடக்க இடத்திலேயே வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் மாட்டு வண்டிகள் அங்கிருந்த பார்வையாளர்கள் மீது மோதியதில் பார்வையாளர்கள் உட்பட மாடுகள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த பார்வையாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதுமட்டுமின்றி, மாட்டு வண்டிகள் செல்வதற்கு போதிய வழியின்றி சாலையின் இரு புறமும் அதிகப்படியான பார்வையாளர்கள் கூடி இருந்ததுதான் இந்த மாட்டு வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான மாட்டுவண்டி பந்தய ரசிகர்கள் பந்தயத்தை காண வருகை தருவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த போலீசார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu