கனிமொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலர்: கோவில்பட்டியில் பரபரப்பு

கனிமொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலர்: கோவில்பட்டியில் பரபரப்பு
X

கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்ட பாஜக கவுன்சிலர் விஜயகுமார்.

கோவில்பட்டியில் கனிமொழி எம்.பியிடம் குடிநீர் பிரச்சினை குறித்து முறையிட்ட பாஜகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினரால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கரிசல்குளம், துறையூரில் தலா 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை தொடக்க விழா மற்றும், கிழவிபட்டி, துறையூரில் மக்கள் குறைகள் கேட்கும் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும் மக்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது, கோவில்பட்டி நகராட்சியின் 20 ஆவது வார்டு உறுப்பினரான பாஜகவை சேர்ந்த விஜயகுமார், தனது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்னை குறித்து கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மனுவினை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இருந்த போதிலும் பாஜக நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தொடர்ந்து தன்னுடைய பிரச்னை குறித்து பேசிக்கொண்டே இருந்தார். எனது வார்டில் இருந்து தங்களுக்கு 1532 வாக்குகள் கிடைத்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் அவர் தொடர்ந்து பேசியதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையெடுத்து திமுகவினர் அவருடன் வாக்குவாதம் செய்ய முற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் விஜயகுமாரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் விஜயகுமார் தொடர்ந்து கனிமொழி எம்.பியிடம் வாக்குவாத்தில் ஈடுபடும் வகையில் பேசிக் கொண்டு இருந்தார்.

இதனால், திடீரென டென்சனான தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தம்பி ரொம்ப சீன் போடாதே என விஜயகுமாரை பார்த்து கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கனிமொழி எம்.பி.யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விஜயகுமார் பேசிக் கொண்டிருந்தபோது வீடியோ எடுத்தவர்களை பார்த்து எவனாவது ரிக்காட் பண்ண சொன்னானா? உங்களை என கேள்வி எழுப்பியதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai in future agriculture