கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு
X

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் மகாகவி பாரதியின் படம் வரைந்து 102 அகல் விளக்கேற்றி மரியாதை செய்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நாட்டின் விடுதலைக்கு தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய முண்டாசு கவிஞன் மகாகவி பாரதிக்கு புகழ்சேர்க்கும் விதமாக அவரது நினைவு தினமான செப்டம்பர் 11 ம் தேதி மகாகவி தினமாக கடைபிடிக்க தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆங்காங்கே உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி மற்றும் கொண்டையராஜூ ஓவிய பயிற்சி பள்ளி ஆகியவை சார்பில், கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மகாகவி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் இந்திய வரைபடத்தில் பாரதியின் படம் வரைந்து 102 அகல்விளக்குகளை ஏற்றி மாணவ, மாணவிகள் மரியாதை செய்தனர்.

பின்னர் பாரதியின் புகழை பரப்பிடவும், பாரதி கண்ட கனவை நிறைவேற்றிடவும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.


கொண்டையராஜூ ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் பாரதி படம் வரைந்து அகல் விளக்கேற்றி பாரதியின் பாடல்களை பாடினர்.

இதில், ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், கனக லட்சுமி, மாலா தேவி, அமலா தேவி, ஜெயலட்சுமி, ஜோதி, ஷீபாராணி, நிர்மலா தேவி உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!