எட்டையபுரத்தில் பாரதியார் நினைவு தின ஊர்வலம்-உறுதி மொழி ஏற்பு

எட்டையபுரத்தில் பாரதியார் நினைவு தின ஊர்வலம்-உறுதி மொழி ஏற்பு
X

பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள்.

எட்டையபுரத்தில் மகாகவி பாரதியின் 102 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் பாரதி வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.

நாட்டின் விடுதலைக்கு தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டையபுரத்து முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் 102 ஆவது நினைவு தினம் செப்டம்பர் 12 ஆம் தேதி எட்டையபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செப்டம்பர் 11 ஆம் தேதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

மகாகவி பாரதி செப்டம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் இறந்ததால் சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் செப்டம்பர் 12 ஆம் தேதி 1921 ஆம் ஆண்டு என வழங்கியுள்ளது. இறப்பு சான்றிதழில் செப்டம்பர் 12 ஆம் தேதி என உள்ளதால் பாரதி மணி மண்டப கல்வெட்டுகளிலும் செப்டம்பர் 12 என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் தேதி மகாகவி பாரதியின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,பாரதியார் நினைவு அறக்கட்டளை ஆகியவை சார்பில் எட்டையபுரத்தில் மகாகவி பாரதியின் 102 ஆவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது, எட்டையபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி, மாரியப்பநாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் பாரதியின் வேடம்புனைந்து பாரதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், பாரதியின் புகழை பரப்பிடவும், அனைவருக்கும் உயர் கல்வி கிடைத்திடவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை, சமவாய்ப்பு கிடைத்திடவும், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


பின்பு பாரதியின் பாடல்களைப் பாடி கோஷங்களை எழுப்பி பாரதி இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

பாரதி வேடம் அணிந்த இளம் பாரதிகளுக்கு ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் டயனா ஜெயந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் லால்பகதூர் கென்னடி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, வேல்முருகன், நடராஜன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and business intelligence