கோவில்பட்டியில் 2 கடைகளுக்கு சீல் வைப்பு: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

கோவில்பட்டியில் 2 கடைகளுக்கு சீல் வைப்பு: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
X

கோவில்பட்டியில் கடைக்கு சீல் வைக்கும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள்.

கோவில்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.

தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், கோவில்பட்டி ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸூ ஆகியோர் அடங்கிய குழுவினர், கோவில்பட்டி - குருமலை சாலையில் உள்ள அனுகிரஹா என்ற மாவு மில்லினை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிறுவனத்தில் மறுபொட்டலமிட 2000 கிலோ மைதா இருப்பு வைக்கப்பட்டு இருந்ததும், அது 25.05.2023 அன்றே காலாவதியானதும் கண்டறியப்பட்டது.

எனவே, பொதுமக்களுக்கு விற்பனைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, அந்த மைதா உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 60,000 ரூபாயாகும். மேலும், அந்த நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமமும் காலாவதியாகி இருந்ததும் கண்டறியப்பட்டது. எனவே, பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தியும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு) ஒழுங்குமுறைகளின் கீழும் அந்நிறுவனத்தின் இயக்கத்தினை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் ஜெயபால் என்பருக்குச் சொந்தமான சுபா டீ ஸ்டால் என்ற கடையிலும், முருகன் என்பவருக்குச் சொந்தமான ஶ்ரீ செல்வம் டீ ஸ்டால் என்ற கடையிலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்கள் தலா 3 கிலோ மற்றும் 1/2 கிலோ என்ற அளவிலும், அச்சிட்ட காகிதங்களும், அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனால், பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, இரண்டு டீ கடைகளும் உடனடியாக மூடி முத்திரையிடப்பட்டன என்றும் அவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டு, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் தெரிவித்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!