சமூக ஆர்வலர் மீது தாக்குதல்: அதிமுக, திமுக நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது வழக்கு

சமூக ஆர்வலர் மீது தாக்குதல்: அதிமுக, திமுக நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது வழக்கு
X

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்கண்ணா.

கோவில்பட்டியில் சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக, திமுக நிர்வாகிகள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.

கோவில்பட்டி சண்முகசிகாமணிநகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணா. நாம் தமிழர் கட்சியின் முன்னாள் தொகுதி செயலாளர். தற்பொழுது சமூக ஆர்வலராக உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது நாடார் மேல்நிலை பள்ளி அருகே நின்று கொண்டு இருந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், திமுக நிர்வாகி ராஜ்குமார், கீர்த்தி வசந்த் மற்றும் சிலர் இவரை வழிமறித்து, தனியார் பள்ளி பிரச்சினை தொடர்பாகவும், ஒரு குறிப்பிட்ட சமூக சங்க தலைவர் பிரச்சினை தொடர்பாக ராஜேஸ்கண்ணா தலையிட கூடாது என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றவே அவர்கள் ராஜேஸ்கண்ணாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ராஜேஸ்கண்ணா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், திமுக நிர்வாகி ராஜ்குமார், கீர்த்தி வசந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போன்று சமூக ஆர்வலர் ராஜேஸ்கண்ணா தாக்கியதாக கூறி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் ராஜேஸ்கண்ணா, கண்ணன், ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்