கோவில்பட்டி கல்லூரி மாணவருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு

கோவில்பட்டி கல்லூரி மாணவருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு
X

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர் மணிகண்டனுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளும் தேசிய ஒருமைப்பாடு முகாம் ஹரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள சவுத்ரிசரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏழு நாட்கள் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இருந்து 10 மாணவ-மாணவிகள் உட்பட, தேசிய அளவில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இயந்திர பொறியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் மணிகண்டன் திருநெல்வேலி மண்டலம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்.

மேலும், முகாமில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர் மணிகண்டனை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மாணவர் மணிகண்டன், அகில இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் படத்தொகுப்பு போட்டியில் இரண்டாம் பரிசை வென்று அனைவராலும் பாராட்டப்பட்டவர் ஆவார்.

தமிழக மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக பணிபுரிந்த திட்ட அதிகாரி முனைவர் மனோஜ்க்கு நேஷனல் பொறியியல் கல்லூரியின் சார்பாக நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும், நேஷனல் பொறியியல் கல்லூரியின் தாளாளர் அருணாச்சலம், கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாஸ முருகவேல், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், சசிரேகா, துறை பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் மாணவர் மணிகண்டனை வெகுவாக பாராட்டி வாழ்த்தினர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு