கோவில்பட்டியில் போராட்டம் நடத்தியவரிடம் ஆசீர்வாதம் பெற்ற மூதாட்டி
கோவில்பட்டியில் நூதன முறையில் போராட்டம் நடத்தியவரிடம் மூதாட்டி ஆசி பெற்றார்.
கோவில்பட்டியில் கந்து வட்டிக்கு எதிராக காவி வேட்டி கட்டி பால் குடத்துடன் போராட வந்தவரிடம் சாமியார் என்று நினைத்து மூதாட்டி ஒருவர் ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற சம்பவம் அரங்கேறியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யலுசாமி. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவரும் வழக்கறிஞருமான அய்யலுச்சாமி கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சமூக பிரச்னைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்.
மேலும், தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை அதிகரித்து வருவதாகவும் இதனால் கந்துவட்டி சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வந்தார். மேலும், மாவட்டம் தோறும் கந்து வட்டிக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு தனிப்படை அமைத்து கந்துவட்டி புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பல கட்டங்களாக அய்யலுசாமி போராடம் நடத்தி உள்ளார்.
இந்த நிலையில், கந்து வட்டி பிரச்னையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காவி வேட்டி அணிந்து பால்குடத்துடன் வந்து நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்தும் அவர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு புகார் அளிக்க வந்த மூதாட்டி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் சாமியார் என நினைத்துக் கொண்டு அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். இந்த சம்பவத்தைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால், போராட்டத்தின்போது அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும், மூதாட்டியின் அறியாமையைக் கண்டு அங்கிருந்தவர்கள் தலையில் அடித்தபடி நகர்ந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu