கிராம அலுவலர்கள் மீது நடவடிக்கை: கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமையில் நிர்வாகிகள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதாவிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றிவரும் வானரமுட்டி கிராம நிர்வாக அலுவலர் அபிராமி, இளையரசனேந்தல் கிராம நிர்வாக அலுவலர் ஆதிலட்சுமி, லிங்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுடலை முத்துகிருஷ்ணன், இனாம்மணியாட்சி கிராம நிர்வாக அலுவலர் சங்கரலிங்கம், ஆகிய நான்கு கிராம நிர்வாக அலுவலர்களும் பட்டா மாற்றம் நில அளவீடுகள் வாரிசு சான்று ஜாமீன் சான்றுகள் ஆகியவற்றிற்கு பணம் ஆயிரக்கணக்கில் லஞ்சமாக வாங்கிக் கொண்டு சான்றிதழ்களை வழங்குகின்றனர்.
பணம் தர இயலாத ஏழை எளிய மக்களை அலைக்கழித்து அவர்களின் மனுக்களை அலட்சியப்படுத்தி அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து விடுகின்றனர். மேலும், பணம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அவர்கள் நினைத்த நேரங்களில் அலுவலகத்திற்கு வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், சரியாக பணி செய்யாத கிராம நிர்வாக அலுவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu