கோவில்பட்டி அருகே சிறையில் இருந்து ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிக் கொலை
கொலை செய்யப்பட்ட அருண் பாரதி. (கோப்பு படம்)
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் அருண் பாரதி (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ். (வயது 19). இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கோவில்பட்டி பைபாஸ் சாலை ஆலம்பட்டி அய்யனார் கோவில் பின்புறம் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனராம்.
அப்போது அங்கு ஒரு பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அருண் பாரதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தலை துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அருண் பாரதி உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான அருண் பாரதியின் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தடயங்களை கைப்பற்றியும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில். கோவில்பட்டி இனாம் மணியாச்சியை சேர்ந்த முத்துராமன் மற்றும் ராஜபாண்டி ஆகிய இரு கோஷ்டிகளுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துராமன் கோஷ்டியை சேர்ந்த சிலரை ராஜபாண்டி கோஷ்டியினர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அந்த சம்பவத்தில் ராஜபாண்டி கோஷ்டியில் அருண் பாரதி இருந்ததாகவும் போலீசாரால் அருண் பாரதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் அருண் பாரதி வெளிவந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தான் இன்று மர்ம நபர்களால் அருண் பாரதி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என மேற்கு காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu