கோவில்பட்டியில் நகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மகேஸ்வரி.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தின் மெயின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி அலுவலர்கள் நேற்று மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பகுதியில் மகேஸ்வரி என்பவர் நடத்தி வந்த டீ கடையையும் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தினை கொண்டு இடித்ததாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே நகராட்சி அதிகாரிகள் கூறியதால் சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பொருள்களை அகற்றி விட்டதாகவும், முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றமால் தனது கடையை மட்டும் நகராட்சி அதிகாரிகள் வேண்டும் என்றே இடித்து விட்டதாகக் கூறி மகேஸ்வரி கண்ணீருடன் சாலையில் பொருள்களை எடுத்து போட்டு, பெஞ்சில் அமர்ந்து திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையெடுத்து, அங்கு சென்ற போலீசாரிடமும் மகேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நகராட்சி நிர்வாகம் சொன்னதும், முதல் நபராக தனது கடையின் முன்பு இருந்த பொருள்களை ஒதுக்கி வைத்ததாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற 6 மாதம் வரை ஆகும் என தெரிவித்துவிட்டு திடீரென தற்போது கடையை அகற்றியது ஏன் என மகேஸ்வரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போலீசார், நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்டோர் சமரசம் செய்ததைத் தொடர்ந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மகேஸ்வரி தனது போராட்டத்தை கைவிட்டார். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழல் காணப்பட்டது. ஆக்கிரமப்பை அகற்றுவதற்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து இருந்தால் போலீஸ் பாதுகாப்பில் எவ்வித பிரச்னை இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கலாம் என்றும் பிரச்னை ஏற்பட்ட பின்னர் தான் நகராட்சி அதிகாரிகள் தகவல் கொடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் எந்தவித பரபட்சம் இல்லமால் அனைத்து ஆக்கிரமிப்புகளும் எடுக்கப்படும் என்றும், ஏற்கெனவே இது குறித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே முறையாக தெரிவித்து விட்டு கால அவகாசம் கொடுத்து தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாகவும் நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu