கோவில்பட்டியில் லாரி மீது மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கோவில்பட்டியில் லாரி மீது மரம் சாய்ந்து விழுந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடற்கரை பகுதிகள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து கீழே விழுந்தன.
கோவில்பட்டி பகுதியில் மழை காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மக்களாசோள பயிர்கள் சேதமடைந்தன. இதற்கிடையே, கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தென்காசி மாவட்டம் வீராணம் பகுதியில் இருந்து தூங்குவதற்கு பயன்படுத்தப்படும் பாய்களை ஏற்றி கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை ஓட்டுநர் தமிழ்செல்வன் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று லாரியின் மீது சாய்ந்து விழுந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். மேலும், லாரி மீது மரம் விழுந்த தகவலை கழுகுமலை தீயணைப்பு துறையினருக்கு அவர் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அறுப்பு இயந்திரம் மற்றும் ஜேசிபி ஆகியவற்றின் உதவிகளைக் கொண்டு மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை காரணத்தினால் பள்ளி விடுமுறை என்பதால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது. மேலும் கழுகுமலை பகுதியில் உள்ள கோவில்பட்டி முதல் சங்கரன்கோவில் செல்லும் பிரதான சாலை என்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu