மணக்கோலத்தில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவி: காத்திருந்து அழைத்துச் சென்ற கணவர்
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய உமா மகேஸ்வரி.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் எத்திலப்பன்நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைவேல்- சின்னம்மாள் தம்பதியின் மகன் சுந்தரவேல் ராமமூர்த்தி. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் - மாரியம்மாள் தம்பதியின் மகள் உமா மகேஸ்வரி. இவர் கீழஈராலில் உள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
சுந்தரவேல் ராமமூர்த்தியும், உமா மகேஸ்வரியும் உறவினர்கள் மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவே, இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
இதையெடுத்து இருவருக்கும் இன்று திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் உமா மகேஸ்வரிக்கு இறுதி ஆண்டுக்கான தேர்வு இன்று தொடங்கியது. இதனால் தேர்வு எழுத வேண்டும் என்று உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். அதற்கு சுந்தரவேல் ராமமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்து மட்டுமின்றி, இன்று காலையில் திருமணம் நடைபெற்றது.
தாலி கட்டிய கையோடு சுந்தரவேல் ராமமூர்த்தி தனது காதல் மனைவி உமா மகேஸ்வரியை தேர்வு எழுத கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். கல்லூரி நிர்வாகத்தினர் புதுமணத் தம்பதியை வாழ்த்தியது மட்டுமின்றி, உற்சாகமாக தேர்வு எழுதும்படி உமா மகேஷ்வரியிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து உமா மகேஸ்வரியும் மணக்கோலத்தில் மகிழ்ச்சியோடு தேர்வு தேர்வு எழுதினார்.
தனது காதல் மனைவி தேர்வு எழுதி முடிக்கும் வரை சுந்தரவேல் ராமமூர்த்தி தேர்வு மையத்துக்கு வெளியே மணக்கோலத்தில் காத்திருந்து, தேர்வு முடிந்தவுடன் மகிழ்வோடு மனைவி உமா மகேஸ்வரியை அழைத்துச் சென்றார். திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய உமா மகேஸ்வரிக்கும், அவரை தேர்வு எழுத அழைத்துச் சென்ற சுந்தரவேல் ராமமூர்த்திக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu