கி.ராவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு - கனிமொழி எம்பி

கி.ராவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு - கனிமொழி எம்பி
X

மறைந்த எழுத்தாளர் கி.ராவின் இறுதிச் சடங்கில் அரசு மரியாதை.

தமிழ் உலகமே கி.ரா எனப் போற்றி வணங்கிய, கொண்டாடிய ஒரு எழுத்தாளர்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கூறினார்.


மறைந்த எழுத்தாளர் கி.ராவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் பேசியது, கரிசல் காட்டின் வாழ்க்கையையும், மொழியையும் தமிழ் உலகிற்கு கொண்டு வந்த சேர்த்த நம்முடைய மொழி ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவரை நாம் இன்று இழந்திருக்கிறோம். இலக்கிய சிந்தனை, சாகித்ய அகாதெமி விருதுகளைப் பெற்றிருக்கக் கூடிய தமிழ் உலகமே கி.ரா எனப் போற்றி வணங்கிய, கொண்டாடிய ஒரு எழுத்தாளர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

மக்களின் இலக்கியங்களை, மொழியை, வாழ்க்கையை எழுதிக் கொண்டு அதைக் கொண்டாடிய எழுத்தாளர் இறுதிக் கட்டம் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். தன்னுடைய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எனக் கடைசி வரை மொழியை தொடர்ந்து வளப்படுத்திக் கொண்டிருந்தார் எழுத்தாளர் கி.ரா. முதல் முறையாக ஒரு எழுத்தாளருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. அதை வழங்கிய முதல்வருக்கு எழுத்தாளர்கள், கி.ராவின் குடும்பத்தினர், தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு ஒரு சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார்.

ஒரு தமிழ் எழுத்தாளருக்கு இந்த மரியாதையை, சிறப்புகளை தமிழக அரசு செய்ய முன்வந்திருப்பதற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கி.ராவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு. ஆனால் அவரை பார்த்து இன்று பல பேர் வட்டார வழக்குகளில், மொழிகளில் மக்களின் கதைகளை சொல்ல முன்வந்திருக்கிறார்கள். அந்த வகையில் அவருடைய எழுத்துப் பணி தொடரும். மக்களிடையே நீடித்து நிலைத்திருக்கும் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!