துளசி மாலை அணிந்து - ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க த.மா.க மனு.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க த.மா.க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி அரசு மருத்துமனையில் உள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் நகரத் தலைவர் கே. பி.ராஜகோபால் தலைமையில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் துளசி மாலை அணிந்து வந்து நூதன முறையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் பால்ராஜ், நகரச் செயலாளர் மூர்த்தி, மாநில மாணவரணி பொதுச் செயலாளர் மாரிமுத்து ராமலிங்கம், மாணவர் அணி நிர்வாகி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியரின் உதவியாளர் முருகானந்தத்திடம் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர். அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 413 படுக்கைகள் உள்ளன இதில் 250 படுக்கைகள் குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தும் வசதி கொண்டது.
கடந்த காலங்களில் நோயாளிகள் குறைவாக இருந்ததால் ஆக்சிசன் போதுமானதாக இருந்தது. தற்போது கோவில்பட்டி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தினமும் ஏராளமானோர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் உற்பத்தில் உள்ள குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ள சிலிண்டர்கள் தொடர்ந்து காலியாகவே இருக்கின்றன.
இந்த சிலிண்டர்களை நிரப்புவதற்கு ஓரிரு நாட்கள் மேல் ஆகிவிடுகிறது. இதனால் ஆக்சிசன் அவசர தேவைகளை கருதி நோயாளிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அல்லது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நாளுக்கு நாள் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள் கலன் நிறுவ வேண்டும்.
இதனால் ஆக்சிஜன் இல்லை என்ற பற்றாக்குறையை போக்க முடியும் , நோயாளிகளை காப்பாற்ற வசதியாக இருக்கும், மேலும் கூடுதலாக படுக்கைகள் அமைக்க வாய்ப்பு இருக்கும். அதுமட்டுமின்றி வெளியூர் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்புவதை தவிர்க்க முடியும். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்தி போதுமான ஆக்சிஜன் சிலிண்டர் சப்பளை செய்து தரவேண்டும்.
திரவ ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோவில்பட்டி பகுதி மக்களை காப்பாற்ற உதவியாக இருக்கும். மேலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ சிகிச்சை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu