கோவில்பட்டி- ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு

கோவில்பட்டி- ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு
X

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்ற ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து பைக்கினை பிரித்து பல மணிநேரம் தீயணைப்பு துறையினர் போராடினர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஜமீன்செங்கப்படை கிராமத்தினை சேர்ந்தவர் வடிவேல்ராஜ். மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது சகோதரர் பாலமுருகன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமுருகன் ஜமீன்செங்கப்படை கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாலமுருகன் கோவில்பட்டியில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு கிளம்பியுள்ளார். அவரை வடிவேல்ராஜ் தனது ஸ்கூட்டர் மூலமாக வழி அனுப்ப கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரயில் வருவதற்கு சிறிது நேரம் இருந்த காரணத்தினால் சகோதரர்கள் இருவரும் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு பாம்பு வடிவேல்ராஜ் பைக்கிற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேல்ராஜ், ரயில்வே நிலைய போலீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பைக்கில் இருப்பதாக கூறப்பட்ட பாம்பினை வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். நேரம் தான் சென்றதே தவிர பாம்பு வெளியே வந்ததாக தெரியவில்லை.

சுமார் 3 மணி நேரம் போராடி பார்த்தும் பாம்பு வெளியே வரவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அருகில் உள்ள இரு சக்கர வாகன ஓர்க்ஷாப்பிற்கு பைக்கினை கொண்டு சென்று, பைக்கினை முழுவதுமாக பிரித்து பார்த்தனர். ஆனால் பாம்பு இருந்ததற்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை. இதனால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பெரும் ஏமாற்றத்துடன் தீயணைப்பு துறையினரும், வடிவேல்ராஜூம் திரும்பி சென்றனர். பைக்கில் பாம்பு சென்ற பிரச்சனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!