திருநங்கைகள் வாழ்வில் விளக்கேற்றியவர் கருணாநிதி: கனிமொழி எம்.பி. பேச்சு
தூத்துக்குடியில் நடைபெற்ற கருத்தரங்கில் கனிமொழி எம்.பி. பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திமுக மாநில மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்த கலைஞர் என்ற தலைப்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கருத்தரங்கம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். கருத்தரங்கில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
ஒரு அரசியல் கட்சித்தலைவர் இயக்கத்தை நடத்துபவர், மற்றவர்களின் வாக்குவங்கி எந்த அளவிற்கு நமக்கு கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு தான் திட்டங்களை அறிவித்து அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்துவார்கள். ஆனால் நம்முடைய தலைவர் கருணாநிதி பார்வையில் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களான மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கண்பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் என அவர்களை அடையாளம் கண்டு, திட்டங்களை அறிவித்து அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தி இவர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்கச் செய்தார்.
அதைபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுகு என்று காப்பகம் அமைத்து, பாதுகாப்பு கொடுத்தார். அப்போது நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தது மட்டுமின்றி காப்பகம் அமைக்கவில்லை என்றால் நாங்கள் தெருவில் செத்துக் கிடந்திருப்போம் என்று தெரிவித்தார்.
நான் உடனே கருணாநிதியிடம் தொடர்பு கொண்டு உங்களுக்கு நான் மகளாக பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தேன். மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் செல்லும் போது உதவியாளர் செல்வதற்கு அரசாணை, உதவித்தொகை, திருநங்கைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைத்திருந்தவர்களின் வாழ்விற்கு வழிவகை செய்து அங்கீகரித்தவர் கருணாநிதி.
மற்றவர்களை போல் வெளிநாடுகளுக்கு அவர்களும் செல்லலாம் என்ற அளவிற்கு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை புரிந்தார். அதையெல்லாம் எண்ணிப் பார்த்து தான் இன்று அவரது வழியில் தடம் மாறாமல் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியிலும் பணிகள் நடைபெறுகின்றன.
கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது மாற்றுத்திறனாளிகள் 12 கோரிக்கைகளை முன்வைத்து அவரை சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும் காத்திருந்து அவர்களை சந்தித்து, அன்றைய தினமே கோரிக்கைகளை பெற்று அரசு அதிகாரிகளை அழைத்து அரசாணை பிறப்பித்து அனைவரது வாழ்விலும் ஒளியேற்றினார்.
உங்களுக்கென இருக்கின்ற ஒருசில கோரிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் முழுமையாக நிறைவேற்றி தருவார். உங்களது எல்லா தடைகளும் நொறுங்கும். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். அதற்கு நீங்கள் எல்லோரும் அரசுக்கு துணையாக இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu