தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்ட கனிமொழி
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இலங்கையை ஒட்டியுள்ள தென்கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது.
இதன் காரணமாக, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. குடியிருப்புகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மழைவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஈடுபட்டு வருகின்றன. மேலும், பேரிடர் மீட்புக் குழுவினரும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சிறிய ரக படகில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், மழை பாதித்த பகுதிகளை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொட்டும் மழையில் சாலையோரத்தில் நடந்துச் சென்றும், அரசுப் பேருந்தில் பயணித்தும் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. கூறுகையில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மருத்துவம், உணவு, உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். உதவி வேண்டுவோர் 80778-80779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கனிமொழி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu